மூவர் கொலை; சி.பி.ஐ., விசாரணை கோரி 40 ஆயிரம் பேரிடம் பா.ஜ., கையெழுத்து
திருப்பூர் : பல்லடம் அடுத்த சேமலைகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 78. இவரது மனைவி அலமேலு, 75. தம்பதி தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தனர்.
இவரது மகன் செந்தில்குமார், 46. கடந்த ஆண்டு நவ., 28ம் தேதி தந்தை, தாய், மகன் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க, 14 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் பதிவான கொடூரமான கொலை மற்றும் தமிழகம் முழுவதும் இதே பாணியில் நடந்த கொலை விபரம் பெற்றும், 265 'சிசிடிவி' பதிவுகளை கைப்பற்றியும் பல கோணங்களில் விசாரணை நடத்தியும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.
கொலை நடந்து, மூன்று மாதங்களை கடந்தும், இதில் தொடர்புடையவர்களை நெருங்க முடியாமல் போலீசார் திக்குமுக்காடி வருகின்றனர்.
வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்ய மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை கடந்த ஜன., மாதம்பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். கடந்த, ஒன்றரை மாதமாக பொங்கலுார் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்களிடம் கையெழுத்து பெறும் பணியை பா.ஜ., வினர் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வரை, 40 ஆயிரம் கையெழுத்து பெற்றுள்ளனர். இன்னும் பத்தாயிம் கையெழுத்து பெற உள்ளனர்.
வரும், 15ம் தேதிக்குள் இப்பணியை முடிக்க மாநில தலைமை அறிவுறுத்தியுள்ளது. கையெழுத்து பெறும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, இம்மாதம் இறுதிக்குள் கவர்னரை சந்தித்து, 50 ஆயிரம் கையெழுத்துடன் மனுவை கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.