சபாஷ் நாகேந்திரன்!... பயணி தவறவிட்ட நகை பையை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு

மதுரை: மதுரையில் ஆட்டோவில் தவறவிட்ட நகைகள் மற்றும் செல்போனை பையை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


நேற்று மதுரை மாநகர் தவிட்டுசந்தை பகுதியை சேர்ந்த சரவணகுமார்,56, என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆட்டோவில் தவிட்டுசந்தையில் ஏறி தெப்பகுளம் பகுதியில் இறங்கியுள்ளார். அப்போது, அவர் கொண்டு வந்த 15 பவுன் நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய கைப்பையை ஆட்டோவிலேயே மறந்து வைத்து விட்டு இறங்கி சென்று விட்டார்.

அதன்பிறகு, நகை பையை தவறவிட்டது குறித்து தெப்பகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, பயணிகளை இறக்கி விட்ட பின் ஆட்டோவில் ஒரு கைப்பை இருப்பதை பார்த்த டிரைவர் கோச்சடை பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன்,52, உடனடியாக, அதனை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கச் சென்றுள்ளார்.


அந்த சமயத்தில் நகை பையை தவறவிட்ட அளித்த புகாரின் பேரில், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று 15 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போன் இருந்த நகை பையை உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.


இந்நிலையில், ஆட்டோ டிரைவர் நாகேந்திரனின் நேர்மையை பாராட்டிய காவல் ஆணையர், அவருக்கு சால்வை அணிவித்து ரூபாய் ஆயிரம் வெகுமதி அளித்து பாராட்டினார்.

Advertisement