கேன்ஸ் செஸ்: இனியன் 'சாம்பியன்'

கேன்ஸ்: கேன்ஸ் ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரான்சில், கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் 38வது சீசன் நடந்தது. இதில் 25 நாடுகளை சேர்ந்த, 6 கிராண்ட்மாஸ்டர்ஸ், 21 சர்வதேச மாஸ்டர்ஸ் உட்பட 147 பேர் பங்கேற்றனர். இதன் 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் இனியன், பிரனேஷ் மோதினர். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய இனியன், 61வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
இந்தியாவின் ஆராத்யா கார்க், பிரான்சின் பியர் பார்போட் மோதிய 9வது சுற்றுப் போட்டி 52வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.


ஒன்பது சுற்றுகளின் முடிவில் 6 வெற்றி, 3 'டிரா' என, 7.5 புள்ளிகளுடன் இனியன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்தியாவின் ஆராத்யா கார்க், நடப்பு ஜூனியர் உலக சாம்பியன் கஜகஸ்தானின் காசிபெக் நோடர்பெக் தலா 7.0 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். பின், 'டை பிரேக்கரில்' ஆராத்யா 2வது, நோடர்பெக் 3வது இடம் பிடித்தனர்.

Advertisement