தேசிய ஹாக்கி: புதுச்சேரி அபாரம்

பஞ்ச்குலா: தேசிய ஹாக்கி போட்டியில் புதுச்சேரி அணி 6-1 என அருணாச்சல அணியை வென்றது.
ஹாக்கி இந்தியா சார்பில், சீனியர் பெண்களுக்கான 15 வது தேசிய சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 'சி' டிவிசன் போட்டியில் புதுச்சேரி அணி 6-1 என அருணாச்சலை வென்றது. புதுச்சேரி அணிக்காக ஜெயபிரதா (13, 39, 41) 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். தீபிகா (4, 22) இரண்டு, சுபாஸ்ரீ (40) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தனர்.
அசாம் அபாரம்
டிவிஷன் 'பி' போட்டியில் அசாம், பீஹார் அணிகள் மோதின. அசாம் அணிக்கு 29 வது நிமிடம் 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை கேப்டன் முன்முனி தாஸ் கோலாக மாற்றினார்.
தொடர்ந்து அசாம் வீராங்கனை குஷ்பூ (59) ஒரு கோல் அடித்தார். போட்டியின் கடைசி நிமிடத்தில் பீஹாரின் நஸ்ரத் கதுான் (60) ஆறுதல் கோல் அடித்தார். முடிவில் அசாம் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
'சி' டிவிசனில் நடந்த போட்டியில் ஆந்திரா 4-2 என்ற கோல் கணக்கில் ஜம்மு அண்டு காஷ்மீரை வீழ்த்தியது. ஆந்திரா சார்பில் ரேவதி (3, 17) இரண்டு கோல் அடித்தார். ஹரதி (36), மதுகுலா (45) தலா 1 கோல் அடித்தனர். ஜம்மு அணிக்காக ரஜ்னி (10), அஞ்சு குமாரி (57) கோல் அடித்தனர்.