அதீத மது போதையால் கல்லுாரி மாணவி பலி

7



திருப்போரூர்: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்வினி, 19, இவர், சென்னை படூரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஏகாட்டூரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார்.



கடந்த 1ம் தேதி, படூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக மாணவியுடன் தங்கினார். மேலும், அவருடன் இரண்டு மாணவியரும் தங்கி இருந்தனர்.


அன்று இரவு முழுதும், அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை, 6:00 மணிக்கு, அஸ்வினிக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்துள்ளார்.

உடனே, அவரை சக மாணவியர், கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வினி இறந்தார்.



கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி மது போதையில் இறந்தாரா அல்லது உணவு ஒவ்வாமையால் இறந்தாரா என்பது, பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என, போலீசார் கூறினர்.

Advertisement