'எங்களை விட்டு போகாதீங்க' என கெஞ்சியும் மிஞ்சினாரா பன்னீர்செல்வம்; நடந்ததுதான் என்ன

மதுரை : அ.தி.மு.க., ஒற்றை தலைமை விவகாரத்தில் 'எங்களை விட்டு போகாதீங்க' என பழனிசாமி தரப்பு கெஞ்சி பார்த்தும், 'தலைமை' பதவிதான் வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பு உறுதியாக இருந்ததே கட்சி பிளவுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழனிசாமி, பன்னீர்செல்வம் என இரட்டை தலைமை ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தியது. 2021 சட்டசபை தேர்தல் சமயத்தில் பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமைதான் வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுக்க, உட்கட்சி பூசல் வெடித்தது. மீண்டும் ஆட்சி அமைக்க பன்னீர்செல்வத்தை சமரசம் செய்யும் முயற்சி தொடர்ந்து நடந்தது. ஆனாலும் பிடி கொடுக்கவில்லை.
இதைதான் நேற்றுமுன்தினம் தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பழனிசாமி, 'எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம்... எங்களை விட்டு போகாதீங்க என்று... நீங்களா போனதற்கு எங்க மேல பழி சுமத்தி பிரயோஜனம் இல்லை' என காட்டமாக கூறினார்.
உட்கட்சி பிளவின்போது நடந்தது குறித்து அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ஜெயலலிதா பதவி வகித்த பொதுச்செயலாளர் பதவியை யாரும் வகிக்கக்கூடாது என்பது பன்னீர்செல்வம் எண்ணம். இதனால்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.
ஆனால் அதில் பல நடைமுறை சிரமங்களும், கட்சிக்குள் மறைமுகமாக அவரவர் ஆதரவு அணிகளும் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இது எதிர்காலத்தில் கட்சி வளர்ச்சியை பாதிக்கும் எனக்கருதிதான் ஒற்றை தலைமை என்ற முடிவு எடுக்கப்பட்டது.
கட்சியை வழிநடத்த பொதுச்செயலாளர் பதவி இருந்தால்தான் நல்லது என முடிவுசெய்தோம். இதை பன்னீர்செல்வம் விரும்பவில்லை. கட்சியின் நலன்கருதி அவரிடம் பலமுறை நிர்வாகிகள் தனித்தனியாகவும், குழுவாகவும் பேசினார்கள்.
அவர் தயாராக இருந்தாலும் உடன் இருந்த சிலர் முட்டுக்கட்டை போட்டனர். 'அ.தி.மு.க.,வை பிளவுபடுத்த நினைத்து வெளியே சென்ற பலரும் தோற்றுதான் போனார்கள். அந்த வரிசையில் நீங்களும் சேர்ந்து விடாதீர்கள்' என கெஞ்சினோம்.
ஆனால் சிலரின் பேச்சை நம்பி இன்று அரசியலில் திரிசங்கு நிலையில் உள்ளார்.
பொதுச்செயலாளர், முதல்வர் பதவி தவிர வேறு எந்த பதவி கேட்டாலும் பழனிசாமி கொடுக்க தயாராக உள்ளார்.
பிரிந்தவர்கள் இணைந்தால்தான் கட்சி வலுப்படும். ஆட்சியையும் பிடிக்க முடியும்.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
கைகொடுத்தது ஏ.ஐ.,: யானைகள் பலி இல்லை
-
தனியார் மருத்துவமனை பெயரில் நிதி மோசடி ஏமாற்றப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம்
-
பாம்பன் பாலம் இருபுறத்திலும் வளரும் முள்மரங்களால் அவதி சுற்றுலா பயணிகள் அதிருப்தி
-
கடற்கரை ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்
-
மாநில அளவிலான கூடைப்பந்து 'டிராபி'யை வென்றது பி.எஸ்.ஜி.,
-
தி.மு.க.,பேனர் வைக்கும் பணியில் துாய்மை பணியாளர்களுக்கு வேலை; கலெக்டரிடம் பா.ஜ., புகார்