'கூட்டணியை காப்பது எங்கள் பொறுப்பு'
மதுரை : மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் எந்தவித சலசலப்பும் கிடையாது. கருத்து முரண்கள் இருந்தாலும் கட்டுக்கோப்பாக, ஒற்றுமையோடு இருக்கிறோம். இக்கூட்டணியை பிடிக்காதவர்கள் இல்லாதது, பொல்லாததை இட்டுகட்டி பேசுகின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல எதுவும் இல்லை.
தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டே அனைத்துப் பிரச்னைகளுக்கும் போராடி வருகிறோம். கூட்டணியில் எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை.
இக்கூட்டணியை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அதிக பங்கு உள்ளது. அந்தக் கூட்டணியை காப்பாற்றும் பொறுப்பும் எங்கள் கட்சிக்கு உள்ளது. அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று செயல்படக் கூடிய கட்சியாகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. எந்த இடத்திலும் பலவீனப்படவில்லை என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வலியுறுத்தி சமூக நீதி வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார்.
அதில் திருமாவளவன் பேசியதாவது: அதிகாரமிக்க உயர் பதவிகள், உயர்கல்வி நிறுவனங்கள், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு இல்லை. இதற்கு யாரும் விளக்கம் தர தயாராக இல்லை. மூன்றாம், நான்காம் நிலை, கடைநிலை பணி நியமனங்களில் மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது. அதுவும் முழுமையாக இல்லை.
உயர்நீதிமன்ற உயர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது என உறுதியாக உள்ளனர். கூட்டி, கழித்து பார்த்தால் இட ஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலை என தெரிய வருகிறது. இட ஒதுக்கீட்டை சிதைக்க அனைத்து பொதுத்துறைகளையும் தனியார்மயமாக்குகின்றனர். சமூக நீதியை தகர்க்க முன்னேறிய சமூக ஏழைகளுக்கு உதவி செய்ய 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
அனைத்து நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு தேவை. சென்னை உயர்நீதிமன்றத்தில் 65 நீதிபதிகளில் 12 முதல் 13 பேர் உயர் சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவ்வாறு பேசினார்.
மேலும்
-
கொழுமம் ரோட்டில் அதிகரிக்கும் விபத்துகள்; டிவைடர் வைக்க வலியுறுத்தல்
-
தக்காளி விலை சரிவு; விவசாயிகள் அதிர்ச்சி
-
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு மொழி தேர்வில் 171 பேர் 'ஆப்சென்ட்'
-
இன்று 'கள்' விடுதலை கருத்தரங்கம்
-
ஹொய்சாளா கலையின் பிரதிபலிப்பு 'அம்ருதேஸ்வரா கோவில்'
-
பிளஸ் 2 தேர்வில் 13,020 பேர் பங்கேற்பு தமிழில் 206 பேர் 'ஆப்சென்ட்'