விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் 'ரெய்டு' ரூ.2.14 லட்சம் பறிமுதல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி, 2.14 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 5:00 மணியளவில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

சார் பதிவாளர் சூர்யா மற்றும் அலுவலக பணியாளர்களிடம் சோதனை நடத்தி நீண்ட நேரம் விசாரணையில் ஈடுபட்டனர்.

அலுவலகத்தில் பத்திர பதிவுக்கு வசூல் செய்த கட்டணத்தை கணக்கெடுத்தனர். அதில் கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரத்து 120 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்தாண்டு இதே சார் பதிவாளர் சூர்யா பணியில் இருந்துபோது லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தற்போது இரண்டாவது முறையாக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement