ரோகித்திற்கு கவாஸ்கர் ஆதரவு

துபாய்: ''கிரிக்கெட் வீரர்களின் உடல் எடை முக்கியமல்ல, மனதளவில் வலிமையாக இருந்தால் போதும், சிறப்பாக செயல்படலாம்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
காங்., செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது கூறுகையில்,'' இந்திய அணி கேப்டன் ரோகித் உடல் எடை அதிகமாக உள்ளது. இதைக் குறைக்க வேண்டும்,'' என தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தன.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:
உங்களுக்கு 'சிலிம்' ஆக உள்ளவர்கள் தான் தேவை என்றால், மாடலிங் நிகழ்ச்சியை காணுங்கள். அங்குள்ள அனைத்து மாடல்களையும் தேர்ந்தெடுங்கள். கிரிக்கெட் அப்படியல்ல. இங்கு எப்படி விளையாடுகிறோம் என்பது தான் முக்கியம்.
சர்பராஸ் கான் உடல் எடை அதிகமானவர் தான். ஆனால் இந்திய அணிக்காக டெஸ்டில் 150 ரன் விளாசினார். தவிர 3 அரைசதம் அடித்துள்ளார். அவரது உடல் எடையால் ஒரு பிரச்னையும் இல்லை.
என்னை பொறுத்தவரையில் வீரர்களின் எடை ஒரு பொருட்டல்ல. மனதளவில் வலிமையாக இருந்தால் போதும். நீண்ட நேரம் சிறப்பாக பேட்டிங் செய்யவும், ரன்கள் எடுக்கவும் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.