போக்குவரத்து கழக பணியாளர்கள் நாளை கோட்டை நோக்கி ஊர்வலம்

விருதுநகர்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், பணியாளர்கள் ஓய்வு பெறும் போது பணப்பலன்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், ஓய்வு பெற்றோர் நாளை (மார்ச் 6) சென்னை கோட்டை தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்று கோரிக்கை மனுக்களை அளிக்கவுள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணிகளிலும் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

உதிரிபாகங்களை முறையாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும். மேலும் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.

பணியாளர்கள் ஓய்வு பெறும் போது பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 110 மாதங்களாக வழங்காத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

பணிமனைகளில் உள்ள கேண்டீன்களை அரசே ஏற்று நடத்த வேண்டும். வாரிசு வேலை, மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை (மார்ச் 6) சென்னைபல்லவன் ரோட்டில் இருந்து கோட்டை தலைமை செயலகம் நோக்கி அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், ஓய்வு பெற்றோர் இணைந்து ஊர்வலமாக செல்லவுள்ளனர்.

இதுகுறித்து விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல பொது செயலாளர் போஸ் கூறியதாவது:

சென்னையில் கோட்டை நோக்கி செல்லும் ஊர்வலத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பணியாளர்கள், ஓய்வு பெற்றோர் பங்கேற்கின்றனர்.

அதன் பின் அரசு போக்குவரத்துறை அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்க உள்ளனர் என்றார்.

Advertisement