மார்ச் 12ல் தற்செயல் விடுப்பு; ஊராட்சி செயலர்கள் முடிவு

தேனி; ஓய்வூதியத்திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி மார்ச் 12ல் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தேனியில் ஊராட்சி செயலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுருளி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கிராம ஊராட்சிகளில் பணிகளை மேற்கொள்ள செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு பணியாளர்களுக்கு இணையாகவே ஊராட்சி செயலர் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது காலமுறை சம்பளம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை அரசின் ஓய்வூதியத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பதிவறை எழுத்தாளர்கள் பெறும் அரசின் சலுகைகள் ஊராட்சி செயலர்களுக்கும் கிடைக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என தொடர்ந்து கோரி வருகிறோம்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 12ல் தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஏப்.,4ல் சென்னை ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் அலுவலகத்தில் முறையீடும், ஏப்.,21ல் காத்திருப்பு போராட்டமும் நடத்தவுள்ளோம் என்றார்.

Advertisement