'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்பது பேச்சுக்கு மட்டும்தானா ஆங்கிலத்தில் வெளியாகும் அரசாணைகள்

மதுரை : தி.மு.க., ஆட்சி அமைந்ததும் 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என கொள்கை முடிவு எடுக்கப்பட்ட நிலையில், தி.மு.க., அரசால் வெளியிடப்படும் அரசாணைகள், உத்தரவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே வெளியிடுவது தமிழ் ஆர்வலர்களை வருத்தமடைய செய்துள்ளது.

தமிழ்நாட்டின் இருமொழி கொள்கையில் 'தாய் மொழி தமிழாகவும், தொடர்பு மொழி ஆங்கிலமாகவும் இருக்கும்' என முதன்முறையாக தி.மு.க., ஆட்சி அமைந்தபோது முதல்வர் அண்ணாதுரை கூறிய வார்த்தைகள்தான் இவை. அதை பின்பற்றி தி.மு.க., ஆட்சி அமையும் போதெல்லாம் முதல்வராக இருந்த கருணாநிதி தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவர் மறைவுக்கு பிறகு 2021ல் முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அரசு கட்டடங்களில் 'தமிழ் வளர்க' என ஒளிரும் பலகைகள் வைக்கப்பட்டன.

அதேசமயம் தமிழக அரசாணைகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே வெளியிடப்பட்டன. மும்மொழி கொள்கை விவகாரத்திற்கு பிறகு, முதன்முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் உத்தரவு தமிழில் வெளியிடப்பட்டது. இதை பின்பற்றி மற்ற உத்தரவுகளும் தமிழிலேயே வெளியிடப்படுமா என எதிர்பார்த்த நிலையில், போக்குவரத்து துறை ஊழியர்கள் பணி விபரம் தொடர்பான விண்ணப்பம் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து தமிழில் விண்ணப்பம் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

ஆனாலும் இன்னும் உள்துறை, நகராட்சி நிர்வாகம் உட்பட சில அரசு துறைகளில் ஆங்கிலத்திலேயே உத்தரவும், அரசாணையும் வெளியிடப்பட்டு வருகிறது. அதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்றுகூட நினைத்திருக்கலாம்.

அதே போல மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சிகளில் வெளியிடப்படும் சில உத்தரவுகளும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. சமீபத்தில் மதுரை நகரில் தெருநாய்கள் குறித்து சர்வே எடுக்க கல்லுாரி மாணவர்களை ஒருங்கிணைக்கும் திட்டம் குறித்த மாநகராட்சி உத்தரவு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

தமிழ் ஆர்வலர்கள் கூறியதாவது: மும்மொழிக் கொள்கையால் தமிழ் மொழி மெல்ல மெல்ல சாகும் எனக்கூறி அதை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என தி.மு.க., அரசு கூறி வருகிறது. ஆனால் அந்த கட்சி நடத்தும் அரசால் வெளியிடப்படும் உத்தரவுகள் தமிழ் மொழியில் இல்லாதது முரண்பாடாக உள்ளது. அதேசமயம் முதல்வர் வெளியிடும் அறிக்கைகள் தமிழில் இருப்பதால் மக்களிடையே எளிதில் சென்றடைகிறது. அதுபோல் அரசாணைகளையும், உத்தரவுகளையும் தமிழிலேயே வெளியிட்டால் மக்களிடையே அதுவும் எளிதில் சென்றடையும்.

இவ்வாறு கூறினர்.

மும்மொழிக் கொள்கையால் தமிழ் மொழி மெல்ல மெல்ல சாகும் எனக்கூறி அதை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என தி.மு.க., அரசு கூறி வருகிறது. ஆனால் அந்த கட்சி நடத்தும் அரசால் வெளியிடப்படும் உத்தரவுகள் தமிழ் மொழியில் இல்லாதது முரண்பாடாக உள்ளது.

Advertisement