காசநோய் அதிகரிப்பு; 125 பேர் கோவையில் பாதிப்பு

கோவை; காசநோய் ஒழிப்பு நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் இந்நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்களின் விபரங்களும், காசநோய் கட்டுப்பாட்டு மைய அலுவலர்களுக்கு அளிக்க வேண்டியது கட்டாயம்.

இந்நிலையில், கோவையில் காசநோய் கண்காணிப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐந்து ஆண்டுகளில் நோய் பாதிக்கப்பட்டு குணமாகி சென்றவர்கள், அவர்களுடைய உறவினர்கள், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்க்கரை நோய் சிகிச்சை பெற்றவர்கள், புகை, மது பழக்கம் கொண்டவர்கள் என, பட்டியல் தயார் செய்து கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன.

இந்த, 100 நாள் சிறப்பு கண்காணிப்பு பணி வரும், 17ம் தேதி வரை நடைபெறும். நேற்று மாலை வரை, கோவையின் பல்வேறு இடங்களில், 3.50 லட்சம் பேரை பரிசோதித்து, அறிகுறிகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், புதிதாக 125 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட மருத்துவப்பணிகள் துணை இயக்குனர், காசநோய் டாக்டர் சக்திவேல் கூறுகையில், ''காசநோய் என்பது தலைமுடி, நகம் தவிர எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரலாம். நுரையீரலில் வரும் காசநோய், பரவும் தன்மை கொண்டது. தயக்கமின்றி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement