பிரான்ஸ் நிறுவனம், டிட்கோ இணைந்து நடத்தும் முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சி

சென்னை:வான்வெளி, பாதுகாப்பு துறைகளில் பயன்படும் சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, பிரான்ஸ் நாட்டின் 'பி.சி.ஐ., ஏரோ ஸ்பேஸ்' நிறுவனத்துடன் இணைந்து, 'ஏரோ ஸ்பேஸ் அண்டு டிபென்ஸ் மீட்' என்ற முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை, டிட்கோ நிறுவனம் சென்னையில் நடத்த உள்ளது.

தமிழகத்தில், வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறையை சேர்ந்த தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, 'தமிழக வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை'யை, 2022 நவம்பரில் வெளியிட்டது.

இக்கொள்கை வாயிலாக, அடுத்த 10 ஆண்டுகளில், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும்; ஒரு லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பி.சி.ஐ., ஏரோ ஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாக, தமிழக அரசின் டிட்கோ உடன் இணைந்து, 'ஏரோ ஸ்பேஸ் அண்டு டிபென்ஸ் மீட்' என்ற முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வரும், 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடத்துகிறது.

இதில், உலகின் பல நாடுகளில் இருந்து வான்வெளி, பாதுகாப்பு துறைகளில் பயன்படுத்தும் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

அந்நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி, தமிழகத்தில் முதலீட்டை ஈர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், வான்வெளி மற்றும் ராணுவ துறையை சேர்ந்த தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க முயற்சி

Advertisement