வர்த்தக துளிகள்

கோவை அன்னபூர்ணா ஜெமினி எடிபிள்ஸ் புதிய கூட்டு



தெலுங்கானா தலைநகர் ஹைதரபாத்தை தலைமையிடமாகக் கொண்ட 'ஜெமினி எடிபிள்ஸ் அண்டு பேட்ஸ்' நிறுவனம், கோவை ஸ்ரீ அன்னபூர்ணா புட்ஸ் ஆகியவை இணைந்து, புதிய கூட்டு வர்த்தகத்தை அறிவித்துள்ளன.
இதன்படி, அன்னபூர்ணா நிறுவனத்தின் பிராண்டிங் மற்றும் வினியோக வணிகத்தில் 70 கோடி ரூபாயை ஜெமினி எடிபிள்ஸ் நிறுவனம் முதலீடு செய்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
கோவை ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தைச் சேர்ந்த 50 ஆண்டு கால நிறுவனமான அன்னபூர்ண புட்ஸ், முன்னணி மசாலா பொருட்கள் விற்பனை நிறுவனமாக உள்ளது. அதனுடன் இணைந்து மசாலா வணிகத்தில் புதிய கூட்டு வர்த்தகத்தில் ஜெமினி எடிபிள்ஸ் ஈடுபட உள்ளது.

ரூ.24,500 கோடி இழப்பீடு ரிலையன்சுக்கு நோட்டீஸ்



பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,க்கு சொந்தமான பகுதியில் எரிவாயு உற்பத்தி செய்ததற்காக, ரிலையன்ஸ் மற்றும் அதன் கூட்டு நிறுவனமான பி.பி., உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 24,500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,க்கு உரிய கச்சா எண்ணெய் எடுக்கும் பகுதியில் இருந்து, இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்து விற்பனை செய்ததன் வாயிலாக கிடைத்த லாபத்திற்காக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கூட்டு நிறுவனமான பி.பி., எக்ஸ்ப்ளோரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, கிட்டத்தட்ட 24,500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, ரிலையன்ஸ் நிறுவனம் பங்குச் சந்தை தாக்கலில் தெரிவித்துள்ளது.

சாதனை அளவை எட்டியதுநாட்டின் உருக்கு இறக்குமதி



சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து செய்யப்படும் இந்தியாவின் உருக்கு இறக்குமதி சாதனை அளவை எட்டியுள்ளது.

அரசின் தற்காலிக தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து, இந்தியா இறக்குமதி செய்யும் உருக்கு சாதனை அளவை எட்டியுள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய கச்சா உருக்கு உற்பத்தியாளரான இந்தியா, தென்கொரியாவில் இருந்து 24 லட்சம் டன்னும், சீனாவில் இருந்து 23 லட்சம் டன்னும், ஜப்பானில் இருந்து 18 லட்சம் டன்னும் இறக்குமதி செய்துள்ளது. இம்மூன்று நாடுகளிலும் முந்தைய ஆண்டை காட்டிலும் நடப்பு நிதியாண்டில் இறக்குமதி அளவு அதிகரித்துள்ளது.

பெல்ரைஸ் - பரமேசு பயோடெக்ஐ.பி.ஓ.,வுக்கு செபி ஒப்புதல்



வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மக்காச்சோளம் சார்ந்த தயாரிப்புகளை தயாரிக்கும் பரமேசு பயோடெக் நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வாயிலாக 2,750 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள செபி ஒப்புதல் அளித்துள்ளது.

பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,150 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. பரமேசு பயோடெக் நிறுவனம் 600 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

Advertisement