நாட்டரசன்கோட்டை கரிகால சோழீஸ்வரர் கோயில் மாசி மக திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் சிவகாமி அம்மன், கரிகால சோழீஸ்வரர் கோயில் மாசி மக திருவிழா நேற்று கொடியேற்றம் நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் மார்ச் 3 ல் மாசி மக திருவிழா அனுக்கை, கணபதி ேஹாமம் நடந்தது. அன்று மாலை வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், பாலிகை பூஜை நடந்தது. நேற்று காலை 8:15 மணிக்கு இரண்டாம் கால பூஜை துவங்கியது. காலை 11:30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் மாசி மக திருவிழா கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நேற்று மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு 7:30 மணிக்கு சுவாமி அம்பாளுடன் திருவீதி உலா நடக்கிறது. மார்ச் 7 இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, மார்ச் 9 காலை 10:30 முதல் 11:30 மணிக்குள் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

தேரோட்ட உற்ஸவம்



மார்ச் 12 அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன், சுவாமி எழுந்தருள்வர். சிறப்பு ஆராதனையை தொடர்ந்து காலை 10:10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேர் நான்கு ரதவீதியை சுற்றி வந்து நிலையை அடையும். மார்ச் 13 காலை 10:30 முதல் 11:15 மணிக்குள் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. இரவு 7:15 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் எஸ்.கணபதிராம், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Advertisement