தட்டுப்போர் அமைக்க விவசாயிகள் தீவிரம்

பல்லடம்,:கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் தீவனப் பயிர்களாக மக்காச்சோள தட்டுகள் மற்றும் மஞ்சள் சோள தட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்காக, விவசாயிகள், சோளத்தட்டுகளை சேகரித்து வைத்து தட்டுப்போர் அமைக்கின்றனர். தேவை அதிகம் உள்ளதால், கால்நடை வளர்ப்பில் ஈடுபடாத விவசாயிகளும், சோளப்யிர் சாகுபடி செய்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். பல்லடம் வட்டாரத்தில், மக்காச்சோளமும், மஞ்சள் சோள பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

விவசாயிகள் கூறுகையில், '40 கத்தை கொண்ட மக்காச்சோள தட்டுகள், 1,000 ரூபாய்க்கும், 64 கத்தை கொண்ட மஞ்சள் சோள தட்டு, 2,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலில் நன்கு காய வைத்து பக்குவப்படுத்தி தட்டுப்போர் அமைக்கப்படுகிறது. இதனால், ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்கு தீவனமாக இவற்றை பயன்படுத்த முடியும். கடந்த காலத்தில், விவசாயிகள் பயன்படும் வகையில் அரசே மானிய விலையில் இவற்றை வழங்கியது.

அதுபோல், தமிழக அரசு மானிய விலையில் இவற்றை வழங்கினால், கோடை காலத்தில் ஏற்படும் உலர் தீவன தட்டுப்பாடு ஏற்படாமல், கால்நடை விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும்,' என்றனர்.

Advertisement