பூண்டியில் ஸ்பெயின் குழுவினர் வியப்பு

திருப்பூர்:திருமுருகன்பூண்டியில் தயாராகும் சிற்ப தொழிலின் நுட்பம் கண்டு, ஸ்பெயின் பயணிகள் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்களுடன் மாணவர்களும் இணைந்து, சிற்பக்கலையின் அதிசயம் உணரும் வாய்ப்பு பெற்றனர்.

ரோட்டரி அமைப்பின் சார்பில், ஸ்பெயின் நாட்டில் இருந்து, 4 குடும்பத்தைச் சேர்ந்த, 8 பேர், இந்தியா வந்துள்ளனர். அவர்கள் நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை அறிந்து செல்கின்றனர்.

அவ்வகையில், திருப்பூர் வந்த ஸ்பெயின் குழுவினர், திருமுருகன்பூண்டிக்கு சென்றனர். அவரை வரவேற்ற பூண்டி ரோட்டரி நிர்வாகிகள் ஒரு சிற்பக்கூடத்துக்கு அழைத்து சென்று, சிலை செதுக்கும் தொழில் குறித்து அறிந்து கொள்ள செய்தனர்.

சிற்ப தொழில் குறித்தும், சிலை தயாரிக்க பயன்படும் கல், அவற்றின் தன்மை, விரல்களின் நுட்பம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும், ஸ்தபதி கனகரத்தினம் விளக்கினார். இதனை கேட்டு வியந்து, நெகிழ்ந்த ஸ்பெயின் குழுவினர், சிற்பக்கலைஞர்களை வாழ்த்தினர்.

இந்நிகழ்ச்சியில், அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள சாந்தி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியர் உட்பட, பூண்டியை சுற்றியுள்ள, நான்கு அரசுப்பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களையும் வரவழைத்து, சிற்பக்கலை குறித்து அரிய தகவல்களை அறிந்துக் கொள்ளும் வாய்ப்பை, பூண்டி ரோட்டரி அமைப்பினர் ஏற்படுத்திக் கொடுத்தது. மாணவ, மாணவியருடன் ஸ்பெயின் குழுவினர் கலந்துரையாடினர்.

இதுதவிர, திருப்பூரில் உள்ள சாய ஆலை, பனியன் நிறுவனங்கள், ரத்த வங்கி, மின் மயானம், டயாலிசிஸ் மையம் உள் ளிட்ட அனைத்து இடங்களையும், பூண்டி ரோட்டரி அமைப்பினர் அவர்களுக்கு காண்பித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை பூண்டி ரோட்டரி தலைவர் டாக்டர் கார்த்திகேயன், செயலாளர் முகம்மது, பொருளாளர் சக்ரபாணி செய்திருந்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவசுப்ரமணியன், உதவி கவர்னர் டாக்டர் விஜய் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை, திட்ட தலைவர் வெங்கட் ஒருங்கிணைத்தார்.

திருப்பூர் பயணத்தின் தொடர்ச்சியாக ஸ்பெயின் குழுவினர் ஈரோடு, உடுமலை, ஊட்டி ஆகிய இடங்களுக்கும் சென்று, அங்கு நிலவும் மக்களின் தனித்துவமான கலாசாரம், தொழில் உள்ளிட்டவற்றை அறிந்துக் கொண்டனர்.

Advertisement