கல்குறிச்சி அரசு பள்ளி ஆசிரியர் மீது விசாரணை

மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களை பற்றி தவறாக மாணவர்களை எழுத சொன்ன ஆசிரியர் குறித்து தாசில்தார் விசாரணை நடத்தினார். முடியை சரியாக வெட்டாமல் வந்த மாணவர்களை ஒழுங்கான முறையில் முடியை வெட்டி வருமாறு அனுப்பி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது அங்கு வேலை பார்க்கும் சில ஆசிரியர்கள் பிற ஆசிரியர்கள், தலைமை ஆசிரியருடன் மோதல் போக்கை கையாண்டு வருவதால் தற்போது மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒழுங்கீனமாக நடந்த மாணவர்களை முட்டி போட வைத்ததை சில ஆசிரியர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கழிவறைக்கு சென்று வந்த மாணவி ஆடையை சரி செய்ய சொன்ன ஆசிரியரை குற்றம் சாட்டியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் ஆசிரியர் ஒருவர் மற்ற ஆசிரியர்களை பற்றி தவறாக எழுதும்படி மாணவர்களிடம் கூறியதை தொடர்ந்து அந்த மாணவர்கள் பள்ளி கழிப்பறை,சுவர் உள்ளிட்ட இடங்களில் எழுதியது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இது சம்பந்தமாக புகார் வந்ததை தொடர்ந்து மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார், துணை தாசில்தார் சரவணகுமார் பள்ளிக்குச் சென்று 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாசில்தார் கிருஷ்ணகுமார் கூறுகையில், இப்பள்ளியில் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வருவதை தொடர்ந்து 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறோம். பிரச்னைக்குரிய ஆசிரியர்கள் குறித்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒழுங்கீனமான முறையில் முடிவெட்டாமல் வந்ததை தொடர்ந்து நேற்று 8 மாணவர்கள் சரியான முறையில் முடியை வெட்டி வருமாறு அனுப்பப்பட்டுள்ளனர் என்றார்.

Advertisement