மாவட்ட மைய நுாலகத்தில் புதிய வசதிகள் 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிப்பு

கோவை:கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் ரோட்டில் உள்ள, மாவட்ட மைய நுாலகத்தை, 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
இரண்டு தளங்கள் கொண்ட இந்த நுாலகக்தில், பத்திரிகை மற்றும் வார, மாத இதழ்கள் படிக்க தனிப்பிரிவும், கதை, கவிதைகள் மற்றும் கட்டுரை நுால்கள் படிக்க தனி பிரிவும் உள்ளது. இவற்றுடன் போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு என, தனிப்பிரிவும் செயல்படுகிறது.
தினமும், 500க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் இளைஞர்களில் வருகை அதிகரித்துள்ளது.
இந்த நுாலகம் 38 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதால், பல ஆண்டுகளாக மராமத்து பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. படிக்கும் அறைகளில் போதிய மின் விளக்குகள், மின் விசிறிகள் இல்லை. சரிசெய்ய, வாசகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 50 லட்சம் ரூபாய் செலவில், மராமத்து பணிகள் நடந்து வருகின்றன.
இது குறித்து, கோவை மாவட்ட நுாலக ஆணைக்குழு அலுவலர் ராஜேந்திரன் (பொறுப்பு) கூறியதாவது:
அனைத்து நுாலகங்களுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, 55 நுாலகங்களுக்கு, 500 சதுரடியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முழுநேரமாக செயல்படும் நுாலகங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடக்கின்றன. 15 நுாலகங்களின் கட்டடங்கள் பழுதடைந்து இருப்பதால், மறு கட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
வாசகர்கள் மதிய உணவு சாப்பிட வசதியாக, தனி அறை கட்டப்பட்டுள்ளது. நுாலக வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில், புல் மற்றும் செடிகள் வைத்து, பூங்கா பராமரிக்க இருக்கிறோம். போட்டி தேர்வுக்கு படிப்பவர்கள், மடிக்கணினி பயன்படுத்த வசதியாக, புதிய மேசை நாற்காலிகள் வாங்கி இருக்கிறோம்.
சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பெரிய எல்.இ.டி., டி.வி.,யும் வாங்கப்பட்டுள்ளது. புதிய நுால்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களில் நுாலகம் புதுப்பிக்கும் பணி முடிந்து விடும்.
இவ்வாறு, அவர் கூறினார்.