சாடிவயலில் புதிய யானைகள் முகாம் விரைவில் திறக்கப்படும்: சுப்ரியா சாஹூ

தொண்டாமுத்தூர்:கோவை மாவட்டம், சாடிவயலில் புதியதாக கட்டப்பட்டுள்ள யானைகள் முகாம் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்தார்.

சாடிவயலில், 8 கோடி ரூபாய் செலவில், புதிய யானைகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முகாமில், யானைகளுக்கு ஷெட்- 18, குட்டைகள்- 3, கரோல் -2, போர்வெல், மாவுத் மற்றும் விடுதிகள், சமையலறை, யானைகள் குளிக்க ஷவர், தண்ணீர் தொட்டி, யானைகள் மேய்ச்சலுக்கான பயிர் வளர்ப்பு, வாட்ச் டவர், கால்நடை மருந்தகம், முகாமை சுற்றிலும் யானைகள் அகழி, மின் வேலி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. புதிய யானைகள் முகாமை, வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ நேற்று ஆய்வு செய்தார். முன்னதாக, வனத்துறை மலையேற்றம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை சந்தித்து, இத்திட்டத்தில் உள்ள குறைகள், நிறைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, வனத்துறை செயலாளர் சீனிவாச ரெட்டி, முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ் குமார், கோவை மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


'ரூ.7 கோாடி செலவில் பாதுகாப்பு வேலி'




சுப்ரியா சாஹூ கூறுகையில், புதிய யானைகள் முகாம் விரைவில் திறக்கப்படும். கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகங்களுக்குட்பட்ட பகுதியில், காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க, ரூ.7 கோடி மதிப்பில் பாதுகாப்பு வேலி அமைக்கும் திட்டத்தின், தற்போதைய நிலை அறிந்து, அதற்கும் நடவடிக்கை ''எடுக்கப்படும். ஆனைகட்டி, சலீம் அலி பறவைகள் சரணாலயத்தில், மனித விலங்கு மோதலை தடுக்க சிறப்பு மையம் அமைக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. திட்ட அறிக்கை வந்த பின், அதுகுறித்த முழு விபரம் தெரியவரும், என்றார்.

Advertisement