பறக்கும் படைக்கு தேர்வு அறைக்குள் தடை; ஒழுங்கீன செயல்களை தடுப்பதில் சிக்கல்

ஒழுங்கீன செயல்களை தடுக்கும் பறக்கும் படைக்கு, தேர்வு அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவது ஏற்புடையதல்ல, என, முதன்மை கண்காணிப்பாளர்கள் புலம்புகின்றனர்.


தமிழக, பள்ளிக்கல்வி பாடத்​திட்டத்தில், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி. நடப்பு கல்வியாண்டுக்கான, பிளஸ் 2 தேர்வு, கடந்த 3ம் தேதி துவங்கிய நிலையில், வரும், 25ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்காக, தமிழகம் முழுதும், 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


மேலும், அறை கண்காணிப்பாளர் பணியில், 43,446 ஆசிரியர்களும், முறைகேடுகளை தடுக்க, 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், ஆள்மாறாட்டம், துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல்.


விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது, விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அந்தந்த தேர்வு மையங்களில் இடம்பெற்றுள்ளது.


ஆனால், நடப்பாண்டு பொதுத்தேர்வில், முறைகேடுகளை தடுக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை, தேர்வு அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தைக் கூறி, அறையின் வெளியில் நின்றவாறு, மாணவர்களைக் கண்காணிக்கவே உத்தரவிடப்பட்டுள்ளது.


இவ்வாறு இருந்தால், மாணவர்களின் ஒழுங்கீன செயல்பாடுகளை எவ்வாறு கண்டறிய முடியும் என, முதன்மை கண்காணிப்பாளர்கள் புலம்புகின்றனர்.


- நமது நிருபர் -

Advertisement