நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க 4 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள்
கோவை:கோவை நகர்ப் பகுதி வழியாக பயணிக்கும் நொய்யல் ஆற்றில், கழிவு நீர் கலப்பதை தடுக்க, நான்கு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுவதற்கு, மாநகராட்சிக்கு, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, மாநகராட்சி பகுதியை கடந்து திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில், 158.35 கி.மீ., பயணித்து, காவிரியில் கலக்கிறது.
இதில், பல இடங்களில் கழிவு நீர் கலக்கிறது; குப்பை கொட்டப்படுகிறது. இரு கரைகளிலும் ஆக்கிரமிப்புகள் ஏராளமாக உள்ளன. அதனால், நொய்யல் ஆறு சீரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணியை, 200 கோடி ரூபாயில் மேற்கொள்ள மாநகராட்சி உத்தேசித்துள்ளது.
முதல்கட்டமாக, மாநகராட்சி பகுதியை கடக்கும் ஆற்றின் இருபுறமும் நகரமைப்பு பிரிவினர் சர்வே எடுத்து கல் நட்டு வருகின்றனர். அடுத்த கட்டமாக, ஆறு சீரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
தற்போதைக்கு ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, நான்கு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆற்றின் கரையை மேம்படுத்தி, இருபுறமும் பொழுதுபோக்கு கட்டமைப்பு ஏற்படுத்த, மாநகராட்சி திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது.