'டாப்' பொருளாதார நாடுகள் ஜப்பானை நெருங்கிய இந்தியா

புதுடில்லி:உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா, நான்காம் இடத்திலுள்ள ஜப்பானை, தரவுகள் அடிப்படையில் நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2024 இறுதி நிலவரப்படி, உலக அளவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்ததாக, ஜப்பான் 4 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உள்ளது. 3.88 லட்சம் கோடியுடன், இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஆனால், 2023ல் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 1.70 சதவீதமாக இருந்த நிலையில், இந்தியா 9 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி கண்டது. 2024ல் ஜப்பானின் வளர்ச்சி, 2.80 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வளர்ச்சி 6.50 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, 2.80 சதவீத வளர்ச்சியை ஜப்பான் உறுதி செய்தால், அதன் பொருளாதார மதிப்பு 4.39 லட்சம் கோடி டாலராக இருக்கும். ஜப்பானைவிட வளர்ச்சி சதவீதம் கூடுதல் என்பதால், 2026 துவக்கத்தில், இந்தியா உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அடுத்த ஓராண்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தை இந்தியா பெறவுள்ளது.

Advertisement