'மக்களுக்கு நாமம் போட்ட தி.மு.க.,'

ஆத்துார்: ''ரேஷனில், 2 கிலோ சர்க்கரை, காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம், கல்வி கடன் தள்ளுபடி போன்றவற்றை நிறைவேற்றாமல் தமிழக மக்கள் நெற்றியில், 'பட்டை நாமம்' போட்டுள்ளது தி.மு.க.,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., பேசினார்.


மாற்று கட்சிகளில் இருந்து விலகியோர், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, சேலம் மாவட்டம் ஆத்துாரில் நேற்று நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். அ.ம.மு.க., ஒன்றிய செயலர் மலைபெருமாள் தலைமையில், 1,500 பேர் உள்பட, தி.மு.க., பா.ம.க., த.மா.கா., வி.சி., கட்சிகளை சேர்ந்தவர்கள் என, 2,445 பேர், இ.பி.எஸ்., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.


இந்நிகழ்வில் இ.பி.எஸ்., பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் எங்கே சென்றாலும், 200 இடங்களை வென்று காட்டுவோம் என்கிறார். அது நடக்காது என்பதற்கு இந்த நிகழ்வு சாட்சி. அ.தி.மு.க., வலுப்பெற்று இருக்கிறது. தி.மு.க., தேய்ந்து வருகிறது என்பதை காணமுடிகிறது.


அ.தி.மு.க.,வில் தனி தலைவர் இல்லை. அனைவரும் இக்கட்சியில் தலைவர்தான். மற்ற கட்சிகள், குடும்பத்துக்கு பட்டா போட்டுவிட்டனர். ரேஷனில், 2 கிலோ சர்க்கரை, காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம், கல்வி கடன் தள்ளுபடி போன்றவற்றை நிறைவேற்றாமல், தமிழக மக்கள் நெற்றியில் தி.மு.க., 'பட்டை நாமம்' போட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில் எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் அருண்குமார், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement