கரூர் வேலுசாமிபுரத்தில் கைத்தறி; பொது வசதி மையம் திறப்பு விழா

கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில், கைத்தறி துறை சார்பில் கட்டப்பட்ட பொது வசதி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.

இதில், கைத்தறி துறை அரசு செயலர் அமுதவள்ளி தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் மையத்தை திறந்து வைத்தனர். பெரிச்சிபாளையம் திரு.வி.க., கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில், வேலுசாமிபுரத்தில் உள்ள தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில், 45.89 லட்சம் ரூபாய் மதிப்பில் பொது வசதி மையம் திறந்து வைக்கப்பட்டது. மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மையம், 2,430 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. மையத்தில் மாதம் ஒன்றுக்கு, 30 கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

நிகழ்ச்சியில், கைத்தறி துறை இயக்குனர் மகேஸ்வரி, துணிநுால் துறை இயக்குனர் லலிதா, கலெக்டர் தங்கவேல், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி கமிஷனர் சுதா, துணிநுால் துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement