கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்ட மசோதா சட்டசபை ஆய்வறிக்கை இன்று தாக்கல்

பெங்களூரு: கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்ட மசோதாவின் சட்டசபை பரிசீலனை அறிக்கை, இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

தற்போது ஒரே ஒரு மாநகராட்சியாக இருக்கும் பெங்களூரை, மூன்று முதல், ஏழுாக பிரிப்பதற்கு காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்காக, தற்போதைய 225 வார்டுகளை, 400 வரை உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டது. இதற்காக, கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்ட மசோதாவை, கடந்தாண்டு, சட்டசபையில் துணை முதல்வர் சிவகுமார் தாக்கல் செய்தார்.

இதற்கு, எதிர்க்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டசபை, மேல்சபை கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பெங்களூரு சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் தலைமையில் சட்டசபை பரிசீலனை குழு அமைக்கப்பட்டது.

இதில், பெங்களூரு நகரின் 28 சட்டசபை தொகுதிகளின் அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழு ஆய்வு செய்து, கடந்த 24ம் தேதி, சபாநாயகர் காதரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்நிலையில், சட்டசபையில் இன்று ரிஸ்வான் அர்ஷத், பரிசீலனை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதன் மீது விவதம் நடக்குமா அல்லது அப்படியே நிறைவேற்றப்படுமா என்பது இன்று தெரியும்.

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடக்காமல், ஐந்தாண்டுகள் ஆகிறது. இனியாவது மாநகராட்சி தேர்தல் நடக்குமா என்று காங்கிரஸ், பா.ஜ., ம.ஜ.த., கட்சி பிரமுகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

இதற்கு முந்தைய பா.ஜ., அரசும், தற்போதைய காங்கிரஸ் அரசும் தேர்தலை தாமதப்படுத்தவே முயற்சித்து வருகிறது என்று முன்னாள் கவுன்சிலர்கள் அங்கலாய்க்கின்றனர்.

Advertisement