எடியூரப்பா லிங்காயத் அல்ல! எத்னால் கிளப்பும் புது சர்ச்சை

பெங்களூரு: ''எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் வளையல் ஷெட்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்,'' என, விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் புது சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவையும், அவரது மகன் விஜயேந்திராவையும், அக்கட்சியின் விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், சில ஆண்டுகளாக பகிரங்கமாக எதிர்த்து வருகிறார்.

இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதாவில், பசனகவுடா பாட்டீல் எத்னால் நேற்று கூறியதாவது:

எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் வளையல் ஷெட்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் பிறந்த மாண்டியாவின் பூகனகெரே கிராமத்தில் சென்று விசாரித்தால் உண்மை தெரியும்.

முன்னாள் முதல்வர்கள் வீரேந்திர பாட்டீல், ஜே.எச்.பாட்டீலுக்கு பின், லிங்காயத் சமுதாயத்தில் யாரும் தலைவர்கள் இல்லை. தவிர்க்க முடியாமல், மக்கள் எடியூரப்பாவை தலைவராக ஏற்றுக்கொண்டனர். ஆனால், அவரோ, வீரசைவர் மற்றும் பஞ்சமசாலிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் மோசம் செய்தார்.

பா.ஜ.,வில் எடியூரப்பாவும், காங்கிரசில் சாமனுார் சிவசங்கரப்பாவும், லிங்காயத் பெயரில் மிரட்டல் விடுக்கின்றனர். வாரிசு அரசியலை மட்டுமே நாங்கள் எதிர்க்கின்றோம். பிரதமர் நரேந்திர மோடியும், வாரிசு அரசியலை விரும்பமாட்டார்.

என்னை நாய் என்று எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா விமர்சனம் செய்துள்ளார். இந்த நாய்க்கு நன்றி உள்ளது. ஆனால், பன்றிகளுக்கு நன்றி இல்லை. எடியூரப்பா ஆட்சியை கவிழ்ப்பதற்காக இதே ரேணுகாச்சார்யா தான், கோவா சென்று சூழ்ச்சி செய்தார். தற்போது அவரே ஆதரவாக பேசுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement