98 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு

பெங்களூரு: கர்நாடக மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் சங்கனுார் கேட்ட கேள்விக்கு, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் அளித்த பதில்:

பெங்களூரில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 98 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. 10.27 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. கூடுதலாக சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் மூலம் 4 லட்சத்து 3 ஆயிரத்து 533 கோடி முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த மாநாட்டில் கர்நாடகாவை சேர்ந்த 2,892 தொழில் அதிபர்கள், பிற மாநிலங்களை சேர்ந்த 286 பேர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 72 பேர் பங்கேற்றனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விண்வெளி, வாகனம், மின்சார வாகனம், இரும்பு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, உணவு பதப்படுத்துல், விவசாயம், உள்கட்டமைப்பு, தளவாடங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 98 நிறுவனங்கள் கையெழுத்திட்டன.

கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கூடுதலாக 5.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் அதிகரித்துள்ளன. 20 நிறுவனங்கள் ஒற்றை சாளர குழுவின் அனுமதியை பெற்றுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு திட்டத்தில் மாற்று விகிதம் சுமார் 60 சதவீதம் ஆக இருந்த நிலையில், இந்த முறை அதை 75 சதவீதம் ஆக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement