மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்த பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர்

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை, பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் சந்தித்து பேசினார். கூடிய விரைவில் காங்கிரசில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

பெங்களூரு யஷ்வந்த்பூர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர். இவர் முன்பு காங்கிரசில் இருந்தவர். கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு மீதான அதிருப்தியில், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த 17 பேரில் சோமசேகரும் ஒருவர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., அரசில் கூட்டுறவு அமைச்சராகவும் பணியாற்றினார்.

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்ததும், பா.ஜ., தலைவர்கள் மீது, சோமசேகர் அதிருப்தி அடைந்தார். எனது தொகுதியில் என்னை தோற்கடிக்க கட்சியினரே முயற்சி செய்தனர் என்று, சோமசேகர் பகீர் தகவல் கூறினார். அதன்பின் பா.ஜ.,வில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார். காங்கிரசுடன் நெருங்கினார்.

முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரை அடிக்கடி சந்தித்தார். ராஜ்யசபா தேர்தலின் போது, கட்சி மாறி ஓட்டு போட்டும் சோமசேகர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனாலும் அவர் மீது இன்னும் பா.ஜ., மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டிற்கு நேற்று காலை, சோமசேகர் சென்றார். கார்கேயை சந்தித்து 15 நிமிடம் உரையாடினார். பின், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மகன் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்க, கார்கேயை சோமசேகர் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மீண்டும் காங்கிரசில் இணைவது குறித்து, சோமசேகர் பேச்சு நடத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கூடிய விரைவில் காங்கிரசில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

Advertisement