345 ரன் விளாசிய புரூஸ் * நியூசிலாந்து வீரர் கலக்கல்

ஆக்லாந்து: நியூசிலாந்து உள்ளூர் தொடரில் 345 ரன் எடுத்து அசத்தினார் டாம் புரூஸ்.
நியூசிலாந்தின் முதல் தர பிளங்கெட் ஷீல்டு தொடர் (4 நாள் போட்டி) நடக்கிறது. ஆக்லாந்தில் நடக்கும் போட்டியில் சென்டிரல் டிஸ்டிரிக்ஸ், ஆக்லாந்து அணிகள் மோதுகின்றன. முதலில் களமிறங்கிய சென்டிரல் டிஸ்டிரிக்ஸ் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை.
அடுத்து இணைந்த கேப்டன் டாம் புரூஸ், டேன் கிளவர் ஜோடி அணியை மீட்டது. கிளவர் 115 ரன் எடுத்தார். டாம் புரூஸ் முச்சதம் விளாசினார். இவர் 401 பந்தில் 345 ரன் (6X6, 36X4) எடுத்து அவுட்டானார்.
முதல் இன்னிங்சில் சென்டிரல் டிஸ்டிரிக்ஸ் அணி 700/5 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. கிளார்க்சன் (166), வில்லியம் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
பின் களமிறங்கிய ஆக்லாந்து அணி, இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 143/3 ரன் எடுத்து, 557 ரன் பின்தங்கி இருந்தது.
மூன்றாவது அதிகம்
இதையடுத்து, நியூசிலாந்து உள்ளூர் தொடரில் மூன்றாவது அதிகபட்ச ரன் எடுத்த வீரர் ஆனார் டாம் புரூஸ் (345). முன்னதாக பெர்ட் சட்கிளிப்பே, ஒடாகோ அணிக்காக 355, 385 என இரு முறை அதிக ரன் எடுத்துள்ளார். பிரவுன்லி (334, 2015), கான்வே (327, 2019) 3, 4வது இடத்தில் உள்ளனர்.