அரூர் பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் அறைஇல்லாததால் சிரமப்படும் தாய்மார்
அரூர் பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் அறைஇல்லாததால் சிரமப்படும் தாய்மார்கள்
அரூர்:அரூர் பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் அறை இல்லாததால், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களில் கைக்குழந்தையோடு வரும் தாய்மார்களும் உள்ளனர். பஸ் ஸ்டாண்டில் திறந்தவெளியில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு, பால் கொடுக்க சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, குழந்தைகளுக்கு தனிமையில் பாலுாட்டும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன், பஸ் ஸ்டாண்டில் தனி அறை அமைக்கப்பட்டது. இதனால் தாய்மார்கள், எவ்வித சங்கடமும் இன்றி, அறையில் பாதுகாப்பாக குழந்தைக்கு பால் கொடுத்தனர்.
இந்நிலையில், கடந்த, 2023ல், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், அரூர் பஸ் ஸ்டாண்ட் நவீன படுத்தும் பணியின் போது, வணிக வளாக கடைகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் அறை இடிக்கப்பட்டது. தொடர்ந்து, நவீனப்படுத்தப்பட்ட அரூர் பஸ் ஸ்டாண்டை கடந்தாண்டு, அக்., 24ல் அமைச்சர் நேரு, திறந்து வைத்தார். ஆனால், நவீன படுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் தாய்மார்கள் அறை கட்டப்படவில்லை.
இதனால், பஸ் ஸ்டாண்டிற்கு வரும் தாய்மார்கள், தங்களது குழந்தைக்கு பால் கொடுக்க மிகவும் சிரமப்படுகின்றனர். திறந்தவெளியில் அசவுகரியமாக குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே, பஸ் ஸ்டாண்டில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.