ஆசியானுக்கு பரிந்துரைத்த 18 சுற்றுலா நகரங்கள்; பட்டியலில் மதுரை புறக்கணிப்பு



'ஆசியான்' என்ற, ஒருமித்த விமான போக்குவரத்து சந்தைக்கு பரிந்துரைத்த, 18 சுற்றுலா நகரங்கள் பட்டியலில், மதுரை விமான நிலையத்தை, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சேர்க்க வேண்டும். இப்பிரச்னையில், தமிழக அரசு தலையிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


கடந்த 2015 ஜனவரி முதல், 'ஆசியான்' என்ற, ஒருமித்த விமான போக்குவரத்து சந்தை அமலுக்கு வந்தது.

விமான சேவை



இதன்படி, இந்தியாவுக்கும், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள, 10 நாடுகளுக்கும், அதிகளவில் சுற்றுலா பயணியர் சென்று வர கூடுதலாக விமான சேவைகளை இயக்க வேண்டும் என்பதற்காக, 18 சுற்றுலா நகரங்களின் பட்டியலை, மத்திய அரசு பரிந்துரைத்தது.

இந்த, 18 நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கும், சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, புரூனே, வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மியான்மர், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளின் விமானங்களை இயங்கலாம்.


இந்த புதிய வழித்தடங்களில் விமான சேவை வழங்க, இருதரப்பு விமான நிலைய சேவை ஒப்பந்தம் செய்ய தேவையில்லை. ஆசியான் இந்திய விமான போக்குவரத்து ஒப்பந்தத்தின் கீழ், எத்தனை முறையும் விமான சேவை அளிக்கலாம்.


தமிழகத்தில், சென்னைக்கு அடுத்து புகழ் பெற்ற நகரம் மதுரை. இங்கிருந்து, ராமேஸ்வரம், கொடைக்கானல், குற்றாலம், கன்னியாகுமரி செல்வதற்கான போக்குவரத்து வசதி உள்ளது.


இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை பரிந்துரைத்த, 18 சுற்றுலா நகரங்களில் தமிழகத்தில் திருச்சி மட்டுமே இடம் பெற்றுள்ளது; மதுரை இடம் பெறவில்லை.

பாயின்ட்ஸ் ஆப் கால்



அதேநேரத்தில், இப்பட்டியலில் உள்ள கஜூராஹோ நகர் உட்பட பல நகரங்களுக்கு, ஆசியான் நாடுகளிலிருந்து நேரடி விமான சேவை அளிக்கும் வாய்ப்பே இல்லை.


அதனால், தகுதி வாய்ந்த நகரமான மதுரை இடம் பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக, மதுரை அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேலு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:





கடந்த 2023 மார்ச் 7ல், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட, 'பாயின்ட்ஸ் ஆப் கால்' பட்டியலில், நம்நாட்டின், 18 நகரங்கள் உலகில் உள்ள பல நாடுகளுடன் விமான சேவை பெறுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளன.

அதில், மதுரையும் சேர்க்கப்பட்டிருந்தால், பல ஆசியான் நாடுகளிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கும். அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.


எனவே, ஆசியானுக்கு பரிந்துரைத்த, 18 சுற்றுலா நகரங்கள் பட்டியலில் மதுரையையும் சேர்க்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னையில் தலையிட்டு மதுரையை மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.




-நமது நிருபர்-

Advertisement