பருப்புகளுக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பு

புதுடில்லி: பருப்பு இறக்குமதிக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும்; மஞ்சள் பட்டாணிக்கான வரியில்லா இறக்குமதியை வரும் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்நாட்டு வினியோகத்தை அதிகரிக்க, மசூர் உள்ளிட்ட பருப்பு வகைகளுக்கு 10 சதவீத இறக்குமதி விதிக்கப்படுவதாகவும், மஞ்சள் பட்டாணியின் வரியில்லா இறக்குமதியை வரும் மே மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுவரை, பருப்பு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பருப்பு வகைகளுக்கு 5 சதவீத சுங்க வரியும், 5 சதவீத செஸ் வரியும் என 10 சதவீத வரி விதிக்கப்பட்டுஉள்ளது. மஞ்சள் பட்டாணியைப் பொறுத்த வரையில், கடந்த 2023 டிசம்பர் முதல் வரியில்லா இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

மதிப்பீட்டின் படி, கடந்த 2024ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட 67 லட்சம் டன் மொத்த பருப்பு வகைகளில், இந்தியாவின் மஞ்சள் பட்டாணி இறக்குமதி 30 லட்சம் டன்னாக இருந்தது.

Advertisement