காஷ்மீர் 'பேஷன் ஷோ'வில் ஆபாசம்; சட்டசபையில் அமளி; முதல்வர் விளக்கம்

1

ஜம்மு : ஜம்மு - -காஷ்மீரில் நடந்த, 'பேஷன் ஷோ' நிகழ்ச்சியில், சிலர் ஆபாசமாக உடையணிந்து சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த விவகாரத்தால் சட்டசபையில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது.


யூனியன் பிரதேசமான ஜம்மு -- காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள குல்மார்க் நகரின் ஒரு ஹோட்டலில், சமீபத்தில் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடந்தது.


பேஷன் டிசைன் நிறுவனம் ஒன்றின் ஆண்டு விழாவுக்காக பனிச்சரிவு பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சியில் சிலர், ஆபாசமாக உடை அணிந்து பங்கேற்ற படங்கள் வெளியாகின.


இதையடுத்து, அம்மாநில முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி, காங்., தலைவர் தீபிகா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


காஷ்மீர் தலைமை மதகுரு மிர்வைஸ் உமர் பாருக் கூறுகையில், “சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் ஜம்மு - -காஷ்மீருக்குள் நடக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பொறுக்க முடியாது. புனித ரம்ஜான் மாதத்தில் இதுபோன்ற ஆபாச நிகழ்ச்சியை நடத்துவது, அருவருக்கத்தக்கது,” என்றார்.


இந்த விவகாரம், ஜம்மு -- காஷ்மீர் சட்டசபையில் நேற்று எதிரொலித்தது. அரை மணி நேரத்துக்கும் மேலாக கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியதாவது:


இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி, மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதை அறிகிறேன். புனித ரம்ஜான் மாதத்தில் இதுபோன்று நடந்திருக்கக் கூடாது என சிலர் கூறுகின்றனர்.


என்னைப் பொறுத்தவரை, ரம்ஜான் மாதம் மட்டுமல்ல, ஆண்டின் எந்தவொரு மாதத்திலும் இதுபோன்ற நிகழ்ச்சியை அனுமதிக்க முடியாது.


தனியார் ஹோட்டலில், தனியார் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சிக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அந்த நிகழ்ச்சியில், சுற்றுலா துறை உள்ளிட்ட எந்தவொரு அரசு துறையோ, அதிகாரிகளோ பங்கேற்கவில்லை. நிகழ்ச்சிக்கு அரசிடம் அனுமதியும் கேட்கவில்லை. சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


முதல்வரின் விளக்கத்தை ஏற்க முடியாது என தெரிவித்த, பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் சுனில் சர்மா, “சட்டசபையிலும், வெளியிலும், முதல்வர் ஒமர் பொய் சொல்கிறார்.

“அவரது உறவினருக்கு சொந்தமான ஹோட்டலில் தான் நிகழ்ச்சி நடந்தது. மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சி பற்றி தெரியாது என அவர் கூறுவது நம்பும்படி இல்லை,” என்றார்.


இதற்கிடையே 'பேஷன் ஷோ' நடத்திய டில்லியை சேர்ந்த சிவன் பாட்டியா, நரேஷ் குச்ரஜா ஆகியோர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

Advertisement