சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் பஞ்சாபில் கைது

சண்டிகர் : அமெரிக்கா, வட அமெரிக்க நாடான கனடா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது தொடர்பாக அமெரிக்க போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

ஒரு பகுதியில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருள் விற்பனை நடப்பதை அறிந்து அங்கு சென்று சோதனை செய்தனர்.

அதில், 391 கிலோ மெத்ஆம்பெட்டமைன், 109 கிலோ கோகைன் ஆகிய போதைப்பொருட்களையும், நான்கு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் தொடர்புடைய அம்ரித்பால் சிங், சீமா சிங், தக்திர் சிங், சரப்ஜித் சிங், பெர்னான்டோ பிராங்கோ ஆகிய ஐந்து பேரை, அமெரிக்க போலீசார் கடந்த மாதம் 26ல் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த தகவலின்படி, கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஷெஹ்னாஸ் சிங், நம் நாட்டின் பஞ்சாபிற்கு தப்பி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பஞ்சாப் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பஞ்சாபில் பதுங்கியிருந்த ஷெஹ்னாஸ் சிங்கை அந்த மாநில போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement