பீஹாரில் துப்பாக்கி முனையில் ரூ.25 கோடி நகை கொள்ளை

பாட்னா : பீஹாரில், பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர், துப்பாக்கி முனையில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
பீஹாரின் போஜ்புர் மாவட்டம், அர்ரா என்ற இடத்தில், 'டாடா' குழுமத்துக்கு சொந்தமான, 'தனிஷ்க்' நகைக்கடை கிளை உள்ளது.
இந்த கடையை நேற்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் திறந்தனர். சிறிது நேரத்தில் கடைக்குள் புகுந்த சிலர், முகமூடி அணிந்திருந்தனர்.
தேடுதல் வேட்டை
பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்த அவர்கள், கடை ஊழியர்களை ஒரு பக்கமாக வந்து நிற்கும்படி மிரட்டினர்.
கொள்ளையர் அனைவரிடமும் துப்பாக்கி இருந்தது. அதை காட்டி மிரட்டிய கொள்ளையர், கடையில் இருந்த தங்கச் சங்கிலிகள், நெக்லஸ், வளையல்கள், வைரங்களை பைகளில் எடுத்து போட்டனர்.
கடையின் கதவை மூடிவிட்டு, ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி நிதானமாக, 30 நிமிடங்கள் வரை அங்கு இருந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து கடை மேலாளர் குமார் மிருத்யுஞ்சய் கூறுகையில், ''மொத்தம், 8 - 9 பேர் கொள்ளையில் ஈடுபட்டனர். இதில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போயுள்ளன. அதைத் தவிர ரொக்கமும் அடக்கம். போலீசை பலமுறை அழைத்தும் பதில் இல்லை,'' என்றார்.
கொள்ளையர் துப்பாக்கியால் தாக்கியதில், இரு ஊழியர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சிறப்பு விசாரணை படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையைத் துவங்கினர். மூன்று பைக்குகளில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த ஆறு பேரை போலீசார் பின் தொடர்ந்தனர்.
இருவர் கைது
அப்போது போலீசை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அது கொள்ளையர்தான் என்பது உறுதியானது.
போலீசார் திருப்பி சுட்டதில் இருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், திருடு போன நகைகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். திருடு போன நகைகள் முழுதும் கிடைத்துவிட்டதா என்பது தெரியவில்லை.