'கனவு நிறைவேற திட்டமிடுதல் அவசியம்'

மேட்டுப்பாளையம்,: 'கனவு நிறைவேற திட்டமிட வேண்டும். திட்டத்தை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்,' என, பேராசிரியை சாந்தி லட்சுமி பேசினார்.
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பெண்கள் தின விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீகானபிரியா தலைமை வகித்தார். பொருளாதார துறை தலைவர் தையல்நாயகி வரவேற்றார். கணிதத்துறை தலைவர் பபிதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கோவை ஜான்சன் ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்லூரியின் பேராசிரியை சாந்தி லட்சுமி பேசியதாவது:
சுயமரியாதை, நன்னடத்தை, ஒழுக்கம் ஆகிய மூன்றும் பெண்களுக்கு மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும். பெண்கள் எதையும் சாதிக்கும் திறன் உடையவர்கள். அவர்களுக்குள் இருக்கும் சக்தியை வெளிப்படுத்தி திறமையை சாதிக்க வேண்டும். மாணவிகள், நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக வர வேண்டும் என, கனவு காண வேண்டும். கனவு என்பது உடனே நடக்காது. அதற்கு திட்டமிட வேண்டும். திட்டத்தை அடைய தினமும் முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் திட்டத்தை அடைய முடியும். கனவை நனவாக்க, உங்களுக்குள்ளே நாம் என்னவாக இருக்கிறோம் என்ற கேள்வியை, கேட்டு அதற்கு தகுந்தார் போல், தினமும் செய்வதை திட்டமிட வேண்டும். இவ்வாறு பேராசிரியை பேசினார்.
விழாவில் மாணவிகள் பங்கேற்றனர். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை அபிராமி நன்றி கூறினார்.