புதுசா பழநி மாவட்டமா... வேண்டவே வேண்டாம்!

உடுமலை : புதிதாக பழநி மாவட்டம் துவங்கும் போது, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவை இணைக்க கூடாது என, பெதப்பம்பட்டி வியாபாரிகள் சங்கம் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளது.

பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கவும், அதில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவை இணைக்கவும், அதிகாரிகளிடம் இருந்து கருத்துரு பெறப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

அவ்வகையில், பெதப்பம்பட்டி வியாபாரிகள் சங்கம் சார்பில், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். அம்மனுவில், பழநி மாவட்டம் உருவாக்கப்பட்டால், அம்மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் பகுதியை இணைக்க இப்பகுதி மக்கள் விரும்பவில்லை.

கோவை மண்டலத்திலுள்ள, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை, மடத்துக்குளம், உடுமலை தாலுகாவை உள்ளடக்கி புதிய மாவட்டத்தை உருவாக்கினால், சிறப்பானதாக இருக்கும். மக்கள் எதிர்பார்ப்பு அடிப்படையில், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கருத்தை வலியுறுத்தி, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில், பெதப்பம்பட்டி பகுதியில், மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, தமிழக அரசுக்கு மனு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

Advertisement