மதுபான ஊழலில் ரூ.2,100 கோடி மோசடி; சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் சோதனை!

1

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது. மதுபான ஊழலில், 2,100 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகவும், இதில் பூபேஷ் பாகேலின் மகனுக்கு தொடர்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. தமிழகத்தைப் போலவே, இங்கும் அரசு நிறுவனம் வாயிலாகவே மதுபான விற்பனை நடக்கிறது.

அரசு நிறுவனமான சி.எஸ்.எம்.சி.எல்., வாயிலாக அரசு நடத்தும் கடைகளில் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இவ்வாறு அரசு நடத்தும் 672 கடைகளில், நாளொன்றுக்கு 32 கோடி ரூபாய் வரை மதுபானங்கள் விற்பனையாகின்றன.

புதிய வழக்கு



கடந்த 2019 முதல் 2022 வரை, காங்கிரசைச் சேர்ந்த பூபேஷ் பாகேல் முதல்வராக இருந்தபோது, மதுபான விற்பனையில் பெரும் மோசடி நடந்ததாக, வருமான வரித்துறை புகார் எழுப்பியது.

இதனடிப்படையில், இதில் நடந்துள்ள பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.

இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், 'வருமான வரித்துறை வழக்கில், எந்த ஒரு திட்டமிட்ட குற்றமும் கூறப்படவில்லை. அதனால், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கு செல்லாது' என, கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது.

இந்நிலையில், சத்தீஸ்கரில் நடந்த மதுபான விற்பனை மோசடி தொடர்பாக, மாநில அரசின் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு அமைப்புகள், கடந்த ஜன., 17ல் வழக்குப்பதிவு செய்தன.

அதனடிப்படையில், அமலாக்கத் துறை புதிய வழக்கை பதிவு செய்துஉள்ளது.

மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதன்படி, மதுபான தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து அரசு கிடங்குக்கு செல்லாமல், மதுபானங்கள் நேரடியாக மதுக்கடைகளுக்கு அனுப்பப்பட்டன.

இதன் வாயிலாக, அரசுக்கு, 4,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், 2,100 கோடி ரூபாய், பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேலுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, துர்க் மாவட்டம் பிலாயில் உள்ள பூபேஷ் பாகேலின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது.

இந்த வீட்டில் தான், பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா, தன் தந்தையுடன் வசித்து வருகிறார்.

சைதன்யாவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் லட்சுமி நாராயண பன்சால் எனப்படும் பப்பு பன்சாலின் வீடு உட்பட, 15 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

தாக்குதல்



இந்த வழக்கில், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கவாசி லக்மா உள்ளிட்ட சிலர், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை, மத்திய அரசு பழிவாங்கும் அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

பூபேஷ் பாகேல் வீட்டில் சோதனை நடப்பதாக செய்தி பரவியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் பலர் அவரது வீட்டின் முன் கூடினர்.

அமலாக்கத்துறையினர் மீது காங்., தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.



மோசடி நடந்தது எப்படி?

காங்கிரசைச் சேர்ந்த ராய்ப்பூர் மேயர் அய்ஜாஸ் தேபாரின் சகோதரரான, தொழிலதிபர் அன்வர் தேபார் இந்த மோசடியின் முக்கிய நபராக கூறப்படுகிறார். இவர், பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் இணைந்து, ஒரு பெரும் குழுவாக ஒருங்கிணைந்து, சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து, அரசு கிடங்குக்கு செல்லாமல், அரசு மதுக்கடைகளுக்கு இந்த மதுபானங்கள் நேரடியாக அனுப்பப்பட்டன. இதற்காக பெருமளவு தொகை கமிஷனாக பெறப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் வரி செலுத்துவதை தவிர்த்தன. ஒவ்வொரு பாட்டிலுக்கும் என தனியாக விலை நிர்ணயித்து, கமிஷன் வாங்கப்பட்டது. இதைத் தவிர, வெளிச்சந்தைகளிலும் இந்த மதுபானங்கள் தாராளமாக விற்கப்பட்டன. இந்த வகையில், மாநில அரசின் மொத்த விற்பனையில், 40 சதவீதம் வரை, இதுபோல் சட்டவிரோத முறையில் விற்கப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் கூறப்படுகிறது.அமலாக்கத்துறை சோதனை குறித்து பூபேஷ் பாகேல் கூறுகையில், ''என் வீட்டில் நடந்த சோதனையில் 32 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. எனக்கு விவசாய நிலம் வாயிலாக ஏராள மான வருவாய் வருகிறது. அதை ஒப்பிடுகையில் இந்த தொகை பெரிய விஷயமல்ல,'' என்றார்.

Advertisement