கனடா பிரதமராக மார்க் கார்னி தேர்வு; இந்தியா உறவை புதுப்பிக்க உறுதி

ஒட்டாவா : கனடா நாட்டில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் மார்க் கார்னி, 59, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த சில நாட்களில் பிரதமராக பதவியேற்க உள்ள அவர், இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கத் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஜனவரியில், தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்தாண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மக்களின் செல்வாக்கை இழந்ததால், கட்சியின் ஒரு பிரிவினர் நெருக்கடியைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.
கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, பிரதமராக அவர் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மார்க் கார்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த சில நாட்களில் அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
கனடா பார்லிமென்டுக்கு இந்தாண்டு அக்டோபரில் அடுத்த தேர்தல் நடக்க வேண்டும்.
அதே நேரத்தில், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அடுத்த சில மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை பிரதமராக பதவியேற்ற பின், கார்னி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக நுழைபவர்களை தடுக்கத் தவறியதால், கனடா மீது வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். மேலும், கனடாவை, அமெரிக்காவின், 51வது மாகாணமாக இணைக்கப் போவதாகவும் அவர் கூறி வருகிறார். இந்த சூழ்நிலையில், கனடாவின் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்க உள்ளார்.
கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக, ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதைத் தொடர்ந்து இரு தரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய, மார்க் கார்னி, 'பிரதமர் பதவி கிடைத்தால், இந்தியா உட்பட ஒருமித்த கருத்துடைய நாடுகளுடனான உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று கூறியிருந்தார்.
அதனால், இவர் பிரதமராக பதவியேற்ற பின், இந்தியா - கனடா இடையேயான உறவு புதுப்பிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் பிறந்த கார்னி, கனடா, பிரிட்டன், அயர்லாந்து குடியுரிமைகளை பெற்றவர். ஆனால், கனடா குடியுரிமையை மட்டும் தக்க வைத்துள்ளார். பொருளாதாரத்தில் பிஎச்.டி., படித்துள்ள இவர், கனடாவின் மத்திய வங்கியின் கவர்னராக, 2008 முதல் 2013 வரை பணியாற்றினார். அப்போது ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க இவரது கொள்கைகள் உதவின.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மத்திய வங்கியான 'பாங்க் ஆப் இங்கிலாந்தின்' தலைமைப் பொறுப்பை, 2013 முதல் 2020 வரை ஏற்றிருந்தார். கடந்த, 1694ல் உருவாக்கப்பட்ட அந்த வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற, ஒரே பிரிட்டன் அல்லாதவர் என்ற பெருமையைப் பெற்றார். அரசியல் அனுபவம் இல்லாத இவருடைய மனைவி, பிரிட்டனில் பிறந்தவர்.
மேலும்
-
சாலையில் யானை: போக்குவரத்து பாதிப்பு
-
யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வருவதை தடுக்க ஆக்க பூர்வமான நடவடிக்கை; விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆர்.டி.ஓ., உறுதி
-
நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் தடுப்பு கற்கள்
-
சென்றாய பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
-
இ.கம்யூ., காத்திருப்பு போராட்டம்
-
முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்