நேரு ஸ்டேடியத்தில் 'கோல்' அடித்து உற்சாகப்படுத்திய கலெக்டர்

கோவை : நேரு ஸ்டேடியத்தில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்களுடன் சேர்ந்து விளையாடி, கோவை கலெக்டர் உற்சாகப்படுத்தினார்.

கோவை நேரு ஸ்டேடியத்தில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தார். அங்கு ரூ.6.55 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை ஓடுபாதையை பார்வையிட்ட அவர், ஓடுபாதையின் நீளம், அகலம், பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பார்வையாளர்கள் அமரும் இடத்தில், சிறு பழுதுகளை சரிசெய்யவும் உத்தரவிட்டார். ஸ்டேடியத்தில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு, வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்ததுடன், கீரை, முட்டை வகைகளை வாரம் இரு முறை தவறாமல் வழங்கவும் அறிவுறுத்தினார்.

அங்கு கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களிடம், பயிற்சியாளர் சரியான நேரத்துக்கு வருகிறாரா என்பன உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்து, மாணவர்களுடன் கால்பந்து விளையாடி உற்சாகப்படுத்தினார்.

பின்னர், ஜிம்னாஸ்டிக், தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து பயிற்சி மேற்கொண்ட மாணவர்களிடம், பதக்கங்கள் குவித்து கோவைக்கு பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

விளையாட்டுத்துறை அலுவலர்களிடம் மைதானத்துக்கான, கூடுதல் வசதிகள் குறித்து கடிதம் வாயிலாக வழங்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, மண்டல முதுநிலை மேலாளர் அருணா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement