நகரில் குறையாத டிராபிக்: நிரந்தர தீர்வு தேவை
உடுமலை : உடுமலை நகரில், நெரிசலை தவிர்க்க, அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்காததால், போக்குவரத்து நெரிசலில் நகரம் சிக்கி தவிக்கும் நிலை தொடர்கதையாக உள்ளது.
உடுமலை நகரம், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான ரோடுகள் நகரப்பகுதியில் உள்ளன
பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு, ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு, வ.உ.சி., வீதிஉட்பட முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்பு காரணமாக, போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது.
நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீஸ் சார்பில், 'பார்க்கிங்' இடத்தை வரையறுக்கும் திட்டமும் ரோட்டோர ஆக்கிரமிப்புகளால், முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.
மேலும், விதிமுறைகளை மீறி 'ப்ளக்ஸ்' பேனர் வைப்பது, தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவது, சரக்கு வாகனங்களை அனைத்து நேரங்களிலும் அனுமதிப்பது போன்ற காரணங்களால், காலை, மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகளும் அதிகரிக்கிறது.
குறிப்பிட்ட இடைவெளியில், பெயரளவுக்கு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், மீண்டும் பழைய நிலை, சில நாட்களிலேயே ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
வருவாய்த்துறை, நகராட்சி, போலீஸ், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, நகர நெரிசலை குறைப்பதற்கான ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும்.
தொடர் நடவடிக்கைகளால், நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.