டிஜிட்டல் முறையில் மட்டும் 'ஸ்கேன்' கட்டணம்
மதுரை : அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை 'டிஜிட்டல் பேமென்ட்' முறையில் மட்டும் செலுத்த தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் (டி.என்.எம்.எஸ்.சி.,) உத்தரவிட்டுள்ளதால் ரொக்கமாக பணத்துடன் வரும் நோயாளிகள் பரிதவிக்கின்றனர்.
தமிழகத்தில் 37 அரசு மருத்துவக்கல்லுாரி சார்ந்த மருத்துவமனைகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்வதற்கு டி.என்.எம்.எஸ்.சி., கட்டணம் நிர்ணயித்துள்ளது.பெரும்பாலான நோயாளிகள் ரொக்கமாக பணம் செலுத்தி பரிசோதனை செய்து வந்த நிலையில் டி.என்.எம்.எஸ்.சி., புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் படி கியூ.ஆர். கோடு, ஜிபே, போன்பே மூலம் மட்டும் 'டிஜிட்டல்' இணையதளத்தில் பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. நோயாளிகளிடம் இருந்து ரொக்கமாக பணம் பெற மறுக்கின்றனர்.
ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக தாகம், பசி மறந்து மணிக்கணக்கில் காத்திருந்து பணம் கட்டச் சென்றால் கேஷியர்கள் விரட்டுகின்றனர். கையில் பணத்தை வைத்துக் கொண்டு அதை எப்படி 'டிஜிட்டல்' பணமாக மாற்றுவதென தெரியாமல் தவிக்கின்றனர்.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வரும் நோயாளிகள் வலியும், அவஸ்தையும் தாங்காமல் கேஷியர்களுடன் வாக்குவாதம் செய்கின்றனர். இதனால் ஸ்கேன் எடுப்பதும் தாமதமாகிறது.நோயாளிகள் விஷயத்தில் தேவையற்ற சங்கடங்களை தவிர்க்க வேண்டும் எனில் ரொக்கமாகவும் டிஜிட்டல் முறையிலும் ஸ்கேன் கட்டணத்தை செலுத்த வேண்டும் என டி.என்.எம்.எஸ்.சி., மறு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே இப்பிரச்னை முடிவுக்கு வரும்.