மூதாட்டி கொலையில் 2 பேர் கைது
பெருங்குடி : அவனியாபுரத்தில் சாக்குமூடையில் பெண் உடலை வைத்து வீசிச்சென்ற விவகாரத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த விவரம் வெளியாகியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவனியாபுரம் ஈச்சனேரி பகுதியில் மார்ச் 4ல் சாக்கு மூடையில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. தனிப்படை போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட அப்பெண் வில்லாபுரம் மீனாட்சி நகர் நடராஜன் மனைவி இந்திராணி 70. மதுரை ஆவினில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2020 முதல் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக கீரைத்துறையில் தனியாக வசித்து வந்தார்.
ஏப்., 20முதல் இந்திராணியை காணவில்லை என அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது என்ற விவரம் தெரியவந்தது.
நகை தொடர்பாக தகராறு
கொலையாளிகளை தேடிய தனிப்படையினர் வில்லாபுரம் சந்திரசேகர் 50, கீரைத்துறை அமர்நாத் 38, ஆகியோரிடம் விசாரித்தனர்.
2020ல் கணவனை பிரிந்த இந்திராணிக்கு கீரைத்துறையில் சந்திரசேகர் வீடு பார்த்துக் கொடுத்துள்ளார். அப்போது முதல் இந்திராணிக்கு தேவையான உதவிகளை அவர் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்திராணி வீட்டில் இருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து சந்திரசேகரிடம் இந்திராணி கேட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சந்திரசேகர் தாக்கியதில் இந்திராணி இறந்தார்.
இதையறிந்த சந்திரசேகர், அமர்நாத் துணையுடன் இந்திராணியின் உடலை சாக்கு மூட்டைக்குள் கட்டி ஈச்சனேரி பகுதியில் வீசிச்சென்றது தெரிந்தது.
இருவரையும் பெருங்குடி போலீசார் கைது செய்தனர்.