வரும் 15ல் 4 மண்டலங்களில் கணித, அறிவியல் ஆசிரியர் மாநாடு
வரும் 15ல் 4 மண்டலங்களில் கணித, அறிவியல் ஆசிரியர் மாநாடு
சேலம்:அரசு பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடங்களில் தானாக பரிசோதனை செய்து, கற்றலை மேம்படுத்தும்படி, வானவில் மன்றம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் புதுமையாக செயல்படும் ஆசிரியர்களை ஊக்குவிக்க, அறிவியல், கணித ஆசிரியர்களுக்கு மாநாடு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு, புதுமையான கற்றல், கற்பித்தல் குறித்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க, கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. 643 பேர் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இவர்கள் ஆய்வு அறிக்கைகளை பொது மேடையில் சமர்ப்பிக்கும்படி, மண்டல வாரியாக, ஆசிரியர்கள் ஆய்வு மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வரும், 15ல் மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட ஆசிரியர்களுக்கு, நாமக்கல்லில் ஆய்வு மாநாடு நடக்க உள்ளது. அதேபோல் தெற்கு மண்டலத்தில் மதுரை, மத்திய மண்டலத்தில் புதுக்கோட்டை, வடக்கு மண்டலத்தில் வேலுார் ஆகிய இடங்களிலும், அதே நாளில் ஆசிரியர்கள் ஆய்வு மாநாடு நடக்க உள்ளது. ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து, சிறந்த, 10 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் வரும், 22ல் மாநில ஆய்வு மாநாடு நடக்க உள்ளது.