7 பெருமாள் சுவாமிகளுடன் சப்த கருட சேவை கோலாகலம்


7 பெருமாள் சுவாமிகளுடன் சப்த கருட சேவை கோலாகலம்


சேலம்:மாசி மக திருவிழாவையொட்டி, சேலத்தில் வாரி பஞ்ச கருட சேவை குழு சார்பில், 5 கோவில்களில் இருந்து பெருமாள்களை ஒரே இடத்தில் பஞ்ச கருட சேவையில் எழுந்தருள செய்து, மண்டகப்படி பூஜை நடத்தப்பட்டது. இரு ஆண்டாக, 7 கோவில்களின் பெருமாள் சுவாமிகள், கருடசேவையில் தரிசனம் தரும் சப்த கருடசேவையாக நடத்தப்படுகிறது. இதன், 10ம் ஆண்டான நேற்று, பட்டைக்கோவில் அருகே சிங்கமெத்தை பென்னாடம் வெங்கட்ராமன் தெரு -கிருஷ்ணன் கோவில் தெரு சந்திப்பில், இந்நிகழ்வு நடந்தது.
இரவு, 7:00 முதல், 8:00 மணிக்குள், பட்டைக்கோவில் வரதராஜர், கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணர், அம்மாபேட்டை சவுந்தரராஜர், அசோக் நகர் லட்சுமி வெங்கடேச பெருமாள், கிருஷ்ணா நகர் சீதா ராமச்சந்திர மூர்த்தி, எருமாபாளையம் ராமானுஜர் மணிமண்டப ரங்கநாதர், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களின் பெருமாள்கள் ஊர்வலமாக வந்து, அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் சப்த கருட சேவையாக காட்சி அளித்தனர்.
அங்கு அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் மண்டகப்படி சிறப்பு பூஜை நடத்தி, பக்தர்களுக்கு துளசி, தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. ஒரே இடத்தில் ஏழு பெருமாள்களின் கருட சேவையை பக்தர்கள் கண்டுகளித்தனர். மேலும் மாசி மக நாளில் கருடசேவையில் பெருமாளை தரிசித்தால் அனைத்து பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை என, பக்தர்கள் தெரிவித்தனர்.

Advertisement