முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த நண்பர் உட்பட இருவர் கைது பணத்துக்காக கொலை செய்ததாக ஒப்புதல்

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தார் குடோனில் முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்து, தாரில் மூழ்கடித்த நண்பர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். உடலை தேடும் பணி நடந்து வருகிறது.

காரியாபட்டி மேலஅழகியநல்லூரை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் துரைப்பாண்டி 62. ரயில்வேயிலும் பணி செய்தார். இவரது மனைவி மலர்விழி சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுவதால் குடும்பத்துடன் குன்றக்குடியில் வசித்து வந்தார். மேலஅழகியநல்லூரில் வீடு, நிலங்கள் இருப்பதால் அடிக்கடி ஊருக்கு வந்து செல்வார்.

ஊருக்கு சென்றவர்திரும்பி வராததால் மார்ச் 1ல் குன்றக்குடி போலீசில் மனைவி புகார் கொடுத்தார். தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் துரைப்பாண்டி வங்கி கணக்கை ஆய்வு செய்த போது நெருங்கிய நண்பரான மேல அழகியநல்லூர் பாண்டிக்கும் 54, ஒண்டிப்புலிநாயக்கனுாரைச் சேர்ந்த ராம்குமார் 27,க்கும் அடிக்கடி பணம் பரிமாற்றம் செய்தது தெரிந்தது.

இவர்கள் இருவரும் காரியாபட்டி ஜோகில்பட்டியில் உள்ள கணேசனுக்கு சொந்தமான தார் குடோனில் வேலை செய்து வந்தனர். இருவரையும் பிடித்து விசாரித்ததில், துரைப்பாண்டிக்கு கார் வாங்கியதில் கூடுதலாக கமிஷன் எடுத்துள்ளனர். இதனைக் கண்டறிந்து ஆத்திரத்தில் போலீசில் புகார் கொடுக்கப் போவதாக மிரட்டினார். பணத்தை திருப்பி தருவதாக கூறி, ஜோகில்பட்டியில் உள்ள தார் குடோனுக்கு அழைத்து வந்தனர்.

அங்கு இருவரும் சேர்ந்து துரைப்பாண்டியை கடுமையாக தாக்கி கொலை செய்தனர். உடலை மறைக்க தார் நிரப்பிய தொட்டியில் போட்டு, காரை கல் குவாரியில் தள்ளி விட்டதாகவும் ஒப்புக்கொண்டனர். உடலையும், காரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.பி., கண்ணன், ஏ.எஸ்.பி., மதிவாணன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

Advertisement