தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?

18

சென்னை: தமிழக பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்



* மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்

* ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்

* இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்

* தமிழகம் எங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்

*புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என நவீனத் தமிழகத்தை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!

'எல்லோர்க்கும் எல்லாம்' எனும் உயரிய நோக்கத்துடன் தமிழகத்தின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக பட்ஜெட். அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்.

அ.தி.மு.க.,பொதுச்செயலாளர், இ.பி.எஸ்.,



தி.மு.க.,வின் பல்வேறு வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ரேஷனில் ஒரு கிலோ சக்கரை அதிகமாக வழங்கப்படும் என்ற தி.மு.க.,வாக்குறுதி என்ன ஆனது? நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

வெற்று அறிவிப்பு



அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஒரு ஆண்டில் எப்படி 40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது சாத்தியமா?கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதிய உயர்வு எங்கே? தேர்தலுக்காக வெற்று அறிவிப்புகள். விளம்பர பட்ஜெட்.

கடன் அதிகரிப்பு



2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புகளை நிரப்பவே முடியாது. நாளுக்கு நாளுக்கு கடன் அதிகரித்து கொண்டே செல்கிறது. நிர்வாகத் திறமையற்ற அரசு நடக்கிறது. மக்களின் கோபம், கொந்தளிப்பை குறைக்க முயற்சிக்கிறார்கள். அது நடக்காது.

தமிழக பா.ஜ., தலைவர், அண்ணாமலை




பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க., வெளியிடும் பட்ஜெட்டும், இது போன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை.




விளம்பர அறிவிப்புகள்

அண்ணாமலை அறிக்கை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.

ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. தி.மு.க.,வுக்கு வேண்டப் பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது தி.மு.க.,






பாசாங்கு




தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பட்ஜெட் அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே. கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்?

கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படுவது போல பள்ளி மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லையே ஏன்?
ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா?இல்லை வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா என்பது போகப்போகத் தான் தெரியம்.

அண்ணா பல்கலையை தர வரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பெல்லாம் இருக்கட்டும். முதலில் பல்கலையில் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆயின என்றே தெரியவில்லை. சாதாரண நிலையில் இருக்கும் பொது மக்கள் நேரடியாக பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.

விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் பாஜ அரசு பட்ஜெட்டில் டில்லியில் இருந்து கொண்டு தமிழகத்தையே மறந்து ஒதுக்கியது. இந்த விளம்பர மாடல் அரசு தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழக மக்களின் நலன்களை மறந்து விட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டு உள்ளது. இது தான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கான உறுதிப்பாடு ஆகும்.

மக்களை பற்றி கவலைப்படாமல் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு. இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுககும் மிகப்பெரிய பதிலடியாக 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு விரைவில் உணரும். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர், செல்வ பெருந்தகை

வரலாற்றின் சிறப்பு மிக்க பட்ஜெட். தமிழகத்தை தலை நிமிர வைக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கான பட்ஜெட். அனைத்து மக்களையும் உள்ளடக்கி பயன்பெறும் வகையில் தமிழக பட்ஜெட் உள்ளது.



அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன்

தமிழக அரசின் கடன் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வது, தி.மு.க.,வின் செயலற்ற நிர்வாகத்தை வெளிப்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, சமூகநீதியின் முதல் படியான ஜாதிவாரி கணக்கெடுப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், நதிநீர் இணைப்பு திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு இணைந்த மாநில உரிமை சார்ந்த நீராதார பிரச்னைகளுக்கு தீர்வு என எதுவுமே இல்லாமல் தி.மு.க., அரசால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டிற்கான தலைப்பை எல்லார்க்கும் எல்லாம் என்பதற்கு மாறாக எவருக்கும் எதுவுமில்லை என்று வைத்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

பா. ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

வெற்று பட்ஜெட். அதில் ஒன்றும் இல்லை. வேளச்சேரியில் ரூ.300 கோடியில் பாலம் கட்டுவது இன்னும், அதிகமான கார்களை கொண்டு நிறுத்துவதற்காகவா? விளம்பரத்திற்கான அரசு நடந்து கொண்டிருப்பது என்பதை தமிழக பட்ஜெட் பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்புகள் இல்லை. மக்களுக்காக புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை.

Advertisement