சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்: ரூ.ஆயிரம் கோடி முறைகேடு புகாருக்கு செந்தில்பாலாஜி பதில்

12

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் மீது அமலாக்கத்துறை கூறி உள்ள ரூ.ஆயிரம் கோடி முறைகேடு புகாரை, 'சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். டாஸ்மாக் நிறுவனத்தின் டெண்டரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை ' என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி: மும்மொழி கொள்ளை, தொகுதி மறுசீரமைப்பு என்ற போர்வையில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க கூடிய மத்திய அரசின் மூக முடியை தோலுரித்து காட்டும் வகையில் முதல்வர் எடுத்திருக்கும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய அரசு, அமலாக்கத்துறையை ஏவி டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.



டாஸ்மாக் நிறுவனத்தில் தவறுகள் நடந்தது போல் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். வெளிப்படை தன்மையோடு கொடுக்கப்பட்ட டெண்டரில், எந்த விதமான முறைகேடுகளுக்கும் இடமில்லை. அவர்கள் சொல்லியிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு எந்த அடிப்படையில், எந்த முகாந்திரமும், பொத்தம் பொதுவாக சொல்லியிருக்கிறார். இந்த ஆயிரம் கோடி ரூபாய் என்பதை முன்னதாக ஒருவர் சொல்கிறார். அவர் யார் என்பது உங்களுக்கு தெரியும்.


பின்னர் அமலாக்கத்துறை ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு என்று அறிக்கையில் கூறியுள்ளது. இதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கி இருக்கிறது. இது மக்களுக்கு நன்றாக தெரியும். அமலாக்கத்துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இந்த நிறுவனம் வெளிப்படை தன்மையோடு இயங்கி வருகிறது.


எதிர்க்கட்சி தலைவர் சினிமா படத்தில் வருவது போல ஒரு நேரம், ரூஆயிரம் கோடி, மற்றொரு நேரம் ரூ40 ஆயிரம் கோடி என்கிறார். டாஸ்மாக் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை. யாருக்கும் கொள்முதலில் சலுகைகள் காட்டப்படவில்லை. எந்த விதமான தவறும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடக்கவில்லை. இன்று பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்களை மக்களிடம் மறைக்க, நேற்று அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.

Advertisement